Friday, October 12, 2007

மொழிகள் எவ்வாறு கற்கப்படுகின்றன?

மனிதகுல வரலாற்றில் மொழியின் பங்கு இன்றியமையாதது. தொடர்பாடலின் அடிப்படையாக மொழியே இருந்து வருகிறது. மொழிகள் எவ்வாறு கற்கப்படுகின்றன என்பது தொடர்பாகப் பல்வேறு ஆராய்ச்சிகள் காலத்துக்குக் காலம் மேற்கொள்ளப்படுகின்றன. பல கோட்பாடுகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.

மொழி உள்வாங்கப்படுதல் இரண்டு வகைப்படுகிறது.
1. முதல்மொழி
2. இரண்டாவது மற்றும் பிற மொழி

ஒரு குழந்தை அல்லது வளர்ந்தவர் இரண்டாவது மொழியைக் கற்பது என்பது ஒரு குழந்தை முதல் மொழியைக் கற்பதிலிருந்து வேறுபடுகிறதென்பதால் இவை தொடர்பில் தனித்தனியான ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

1. தாய்மொழி/முதல் மொழி

மனித வளர்ச்சியில் மொழியை உள்வாங்கிக் கொள்வது மிகக் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். குழந்தைகள் எவ்வாறு மொழியை உள்வாங்குகின்றன தொடர்பாக பல்லாண்டுகளாக மொழியியலாளர்களும் உளவியலாளர்களும் ஆராய்ந்து வருகின்றனர். எவ்வாறு குழந்தைகள் மொழியை உள்வாங்குகின்றன? சொற்களைக் கற்பதோடு நின்றுவிடாமல் அர்த்தமுள்ள வசனங்களை அமைக்க முடிவது எவ்வாறு? எளிமையான தொடர்பாடல் சாத்தியமாகையில் சிக்கலான இலக்கணமுடைய மொழியை உள்வாங்கத் தூண்டுவது எது?

இது தொடர்பான ஆராய்ச்சியில் முன்வைக்கப்படும் கோட்பாடுகளில் மூன்று பின்வருமாறு.

அ. வளர்ந்தவர்களைப் பின்பற்றி அவர்களது மொழியை மீண்டும் சொல்லி, பயிற்சி செய்து மொழி கற்கப்படுகிறது. இது 1940கள், 50களில் ஐக்கிய அமெரிக்காவில் பிரபலமாக இருந்த கோட்பாடாகும்
ஆ. குழந்தைகளிடம் இயற்கையிலேயே மொழியை உள்வாங்கும் ஆற்றல் உள்ளது. ஏனைய உயிரியல் அம்சங்கள் வளர்ச்சியடைவது போலவே குழந்தைகளின் மொழியும் வளர்ச்சியடைகிறது. இது நோம் சொம்ஸ்கி முன்வைத்த கோட்பாடாகும்.
இ. குழந்தையின் தனித்துவமான இயல்புகள், குழந்தையின் மொழிச் சூழல் ஆகிய இரண்டு காரணிகளின் தாக்கத்துடன் மொழி உள்வாங்கப்படுகிறது.

2. இரண்டாம் மொழி

இரண்டாம் மொழிக்கற்கை தொடர்பான கோட்பாடுகளும் முதன்மொழிக் கற்கை தொடர்பான கோட்பாடுகளுடன் நெருங்கிய தொடர்புடையவை.

அதாவது,

அ. மற்றவர்களைப் பின்பற்றிப் பயிற்சி செய்து கற்கப்படுகிறது,
ஆ. இயற்கையாக உள்ள உள்ளார்ந்த திறமையால் கற்கப்படுகிறது.
இ. கற்பவரது இயல்புகளும் மொழிச் சூழலும் கற்றலில் தாக்கம் செலுத்துகின்றன.

இவை தவிர மேலும் சில கோட்பாடுகளும் அண்மைக்காலங்களில் முன்வைக்கப்பட்டுள்ளன.

இரண்டாம் மொழியைக் கற்பது சிலருக்கு இலகுவாக உள்ளது தொடர்பிலும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இரண்டாம் மொழியை ஒருவர் கற்பதில் அவரது வயது, கற்பதற்கான சந்தர்ப்பங்கள், கற்பதற்கான ஆர்வம், மொழியை உள்வாங்கும் தனிப்பட்ட திறமை போன்ற காரணிகள் தாக்கம் செலுத்துகின்றன.

(மொழி உள்வாங்கப்படுவது தொடர்பான பெருமளவு ஆங்கில நூல்களில் ஒன்று "மொழிகள் எவ்வாறு கற்கப்படுகின்றன?" (How Languages are Learned). இந்நூல் Patsy M. Lightbown, Nina Spada ஆகியோரால் எழுதப்பட்டு Oxford University Press இனால் வெளியிடப்பட்டுள்ளது. அதன் துணை கொண்டு சில தகவல்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன)

Sunday, December 24, 2006

ஒரு கணம் - வரதர்

மேசையிலே வெள்ளைக் கடதாசி கிடக்க, ஒரு கையிலே பேனாவைத் தயாராக வைத்துக் கொண்டு - ஆனால் ஒன்றும் எழுதாமல், மற்றக் கையால் நாடியைத் தடவிக் கொண்டு கண் பார்த்ததை மனம் பார்க்காமல் - ஆமாம், கற்பனையுலகிலே மிதந்து கொண்டிருக்கிறாரே -

இவர் பெரிய எழுத்தாளர். இலங்கையில் மட்டுமன்றி, தமிழ் நாட்டிலும் தமது சிறுகதைகளை உலவவிட்டுப் புகழ்பெற்றவர். 'சிற்றம்பலம்' என்ற இவருடைய பெயரைச் சொன்னால் உங்களுக்குத் தெரியாது. இவருடைய வாழ்க்கையில் வந்து போன இந்த 'ஒரு கண' நிகழ்ச்சி இவருக்குப் பெருமை தரத்தக்கதல்ல; ஆதலால் இவருடைய பிரசித்திபெற்ற புனைபெயரை இங்கே உபயோகப்படுத்த நான் விரும்பவில்லை.

சிற்றம்பலம் என்ற இந்தப் பெயரும் இவருடைய சொந்தப் பெயரல்ல; இது 'ஒரு' பெயர்; புனை பெயரென்றே சொல்லலாம். இவர் எழுதிய ஒரு கதையில் - நூற்றுக்கணக்கான இவருடைய கதைகளில் நீங்கள் அதை எங்கே தேடிக் கண்டு பிடிக்கப் போகிறீர்கள்? - ஒரு கதையில் 'சிற்றம்பலம்' என்று ஒரு கதாபாத்திரம் வருகிறார். மிக நல்ல உயர்ந்த பாத்திரம். அதைப் படித்து விட்டு அந்தச் சிற்றம்பலம் இவர்தான் என்று பூவழகி-

ஓ! பூவழகியைப் பற்றி இப்போது சொல்ல வேண்டியிருக்கிறது. பூவழகி, சிற்றம்பலம் வீட்டிற்குப் பக்கத்தில் இருப்பவள். அழகி; மென்மையானவள்; இனிமையானவள். அதோடு குறுகுறுப்பும், குறும்புத்தனமும். எல்லாவற்றுக்கும் மேலாக ரசிகத்தனமும் - அவளைச் சிற்றம்பலத்துக்கு மிகவும் பிடிக்கும்! - இங்கே காதல் கூதல் ஒன்றுமில்லை. சிற்றம்பலம் கல்யாணமானவர், நல்ல மனிதர்; பண்புள்ளவர். அவள் கன்னிப்பெண்; களங்கமில்லா நெஞ்சினள்.

இந்தப் பூவழகிதான் இவருக்குச் 'சிற்றம்பலம்' என்ற பெயரை வைத்தாள். அந்தக் கதாபாத்திரமாகத் தம்மை அவள் மதிப்பிடுவதுபற்றி இவருக்குக் கொஞ்சம் பெருமையுமுண்டு.

சிற்றம்பலம் 'வெறும்' எழுத்தாளரல்லர். அதாவது எழுதுவதை மட்டுமே தொழிலாகக் கொண்டவரல்லர். இவர் ஒரு அரசாங்க உத்தியோகத்தர். எழுதுவது சொந்த மனத்திருப்திக்காக. ஆனாலும் அதன்மூலம் மாதம் ஐம்பது, நூறு என்று 'அன்பளிப்பு'களாகப் பெற்றுக் கொண்டிருந்தார். - அது ஒரு கௌரவமும்.

இப்பொழுது இந்த மாலைப் பொழுதிலே இவர் நாடியைத் தடவிக்கொண்டு கற்பனைக் குதிரையில் பறந்து கொண்டிருப்பது 'கதை'க்காகவல்ல. இங்கிருந்து இருபத்தைந்து மைல்களுக்கப்பால் உள்ள ஒரு கிராமத்தில் இவர் பறந்து போய் நிற்கிறார். அங்கே ஒரு வீட்டில் இவருடைய 'செல்லக்கிளி' -

இவருக்கு அவள் 'செல்லக்கிளி.' 'மங்கையர்க்கரசி' என்ற அழகான பெயரை விட்டு விட்டு, 'செல்லக்கிளி' என்று கூப்பிடும்போது இவருடைய இதயத்தின் ஒலி அதிலே கேட்கும். 'மனைவியைத் தலையிலே தூக்கி வைத்திருக்கிறார்' என்று சிலர் கேலியாகச் சொன்னார்கள். 'ஓமோம், அவள் இதற்குத் தகுதியானவள்தான்' என்று இவர் மனதுக்குள்ளே பெருமைப்பட்டார்.

இவருடைய செல்லக்கிளிக்கு இது முதற் பிரசவம். - முதற் பிரசவமென்ன, முப்பதாவது பிரசவமாயிருந்தாலும் அவள் தாய் வீட்டுக்குப் போயிருக்க வேண்டியவள்தான். சிற்றம்பலம் அவள் மீது உயிரையே வைத்திருந்தார் என்பதில் சிறிதளவும் சந்தேகம் இல்லை. ஆனால் வீட்டுக் காரியமென்று ஒரு துரும்பை எடுத்துப் போட்டறியாதவர். அவளை இங்கே வைத்துக் கொண்டு பத்திய பாகமாக எல்லாம் கவனிக்க இவருக்குத் தெரியாது. தெரிந்ததையும் உசாராகச் செய்கிற ஆளுமல்ல.

ஒரு மாதத்துக்கு முன்னால் மங்கையர்க்கரசி சுகமாக ஓர் ஆண் குழந்தையைப் பெற்றுவிட்டாள். இதற்கிடையில் மூன்று நாலு தரம் சிற்றம்பலம் போய்ப் பார்த்துக் கொண்டு வந்துவிட்டார். சென்ற ஞாயிற்றுக்கிழமை போயிருந்தபோது, விரைவில் தன்னையும் கூட்டிக் கொண்டு போகும்படி அவள் விண்ணப்பம் செய்திருந்தாள். - பேதை அந்தச் சொகுசான இடத்தை விட்டு விட்டு, இங்கே இந்த - ஒரு துரும்பை எடுத்துப் போட்டறியாத கணவருடன் வந்துவிடவேண்டுமென்று எதற்குத்தான் துருதுருக்கிறாளோ!

சிற்றம்பலத்துக்கும் இங்கே ஒரேயடியாய் 'வெறிச்'சென்று கிடந்தது. சில நேரங்களில் பைத்தியம் பிடித்த மாதிரியிருக்கும். இருந்தாலும் அவளுடைய நன்மையைக் கருதி இன்னும் சில வாரங்களுக்காவது அங்கே இருக்கட்டுமென்று நினைத்தார். இங்கே இவருக்குச் சாப்பாட்டுக் கரைச்சல் இல்லை. பக்கத்தில் பூவழகி வீட்டில் அதற்கு ஏற்பாடு செய்துவிட்டுத்தான் மங்கையர்க்கரசி போனாள். மத்தியானம் அலுவலகத்துக்குப் பக்கத்தில் எங்கேயோ சாப்பிட்டுக் கொள்வார். காலையும் மாலையும் பூவழகி கொண்டுவந்து கொடுத்து, இவர் சாப்பிடுகிறவரையும் கூட இருந்து இலக்கிய சர்ச்சை செய்துவிட்டுப் போவாள். சில நேரங்களில் சாப்பாடு முடிந்தாலும் சர்ச்சை முடியாது.

இப்பொழுது, இந்த மாலைப்பொழுதிலே, இவர் நாடியைத் தடவிக்கொண்டு யோசித்து - ரசித்து எழுதிக் கொண்டிருப்பது ஒரு கடிதம், - இவருடைய செல்லக்கிளிக்கு!

'..... இங்கே வருவதற்கு என்ன அவசரம் இப்போது? என்னைப் பொறுத்தவரை ஒரு குறைவுமில்லை இங்கே. குழதையையும் வைத்துக்கொண்டு இங்கே தனியாகப் பெரிய கஷ்டமாக இருக்கும் உமக்கு! இன்னும் சில நாட்களாவது உவ்விடத்திலிருந்துவிட்டுப் பிறகு வரலாம். நாதான் வாரந்தவறாமல், வந்து பார்க்கிறேனே!...'

- இப்படி எழுதலாமா என்று மனதுக்குள்ளே சொல்லி ஒத்திகை பார்த்தார்.

'கிளிக்!'

திடீரென்று மின்சார விளக்கின் ஒளி பளிச்சிட்டது.

சிற்றம்பலம் திடுக்கிட்டு 'அந்த' உலகத்திலிருந்து இந்த உலகத்திற்கு வந்து திரும்பிப் பார்த்தார்.

எதிரே -

பூவழகி!

கையில் சாப்பாட்டுத் தட்டுடன் ஒரு வானத்து மோகினிபோலச் சிரித்துக்கொண்டு நின்றாள்.

ஏனோ, அவளைப் பார்த்ததும் அவரால் உடனே ஒன்றும் பேச முடியவில்லை.

"என்ன, இருட்டியதுகூடத் தெரியாமல் 'எழுத்து' நடக்கிறதா?" - பூவழகி கேலியாகக் கேட்டாள்.

"இல்லை, எதையோ யோசித்துக் கொண்டிருந்தேன்..."

"நேற்றுச் சொன்னீர்களே, அந்தக்கதை - தொடங்கி விட்டீர்களா?"

"இல்லை. இது வேறே!"

"வேறு கதையா?"
"இல்லை. வேறு விஷயம்; கடிதம் - மங்கையர்க்கரசிக்கு."

"ஓ!"

"என்ன, ஓ?"

"ஒவ்வொரு நாளும் எழுதுகிறீர்களே பக்கம் பக்கமாக... 'அவ' கொடுத்து வைத்தவ; நீங்கள் சுவையாக எழுதுவீர்கள். எழுத்தாளரல்லவா?"

"உமக்கென்ன தெரியும்! அவ எழுதுகிற கடிதங்கள் எவ்வளவு நன்றாக இருக்கும் தெரியுமா?"

"இருக்கும், உங்களுக்கு மட்டும்!"

சிற்றம்பலம் சிரித்தார்; பதில் சொல்லவில்லை.

இதற்கிடையில் சாப்பிடவும் தொடங்கி விட்டார்.

பூவழகி சொன்னாள்: "நீங்கள் 'அகில'னின் 'பாவை விளக்'கைக் கட்டாயம் படிக்க வேண்டும்!"

"படிக்காவிட்டால் விடமாட்டீர் போலிருக்கிறதே?"

"என் சினேகிதி ஒருத்தி 'கல்கி'யில் வந்ததை எடுத்துக்கட்டி வைத்திருக்கிறாள். அதை இரவல் கேட்டிருக்கிறேன், உங்களுக்காக!"

"நன்றி... என் நண்பர்கள் சிலரும் அந்தக் கதையைப்பற்றிப் புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஒருவர் அந்தக் கதையையே எனக்குச் சுருக்கிச் சொல்லிவிட்டார்!"

"அதை ஏன் கேட்டு வைத்தீர்கள்?... பிறகு படிக்கும் போது சுவை குறைந்து போகும்!"

"திருப்பித் திருப்பிப் படித்தாலும் சுவைக்கும் என்கிறார்களே!"

"ஓமோம். என்ன அருமையாக எழுதியிருக்கிறார்..."

"அதிலே கதாநாயகனுக்கு - அவன் பெயரென்ன?..."

"தணிகாசலம்"

"அந்தத் தணிகாசலத்திற்கு மூன்று நான்கு காதலிகளாமே?"

"கதையைப் படித்தீர்களானால் இப்படித் தணிகாசலத்தைக் கேலி செய்யத் தோன்றாது. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் எந்த ஒரு ஆண்பிள்ளையும்..."

"ஆண்பிள்ளைகளைப்பற்றி அதிகம் தெரிந்து வைத்திருக்கிறீரா..." - சிற்றம்பலம் சிரித்தார். அந்தச் சிரிப்பில் தெரிந்தது கேலியா, அசடா? அவர் தொடர்ந்து சொன்னார்: "அந்தப் பெண்களில் ஒருத்தி முக்கியமானவள் - ஒரு ரசிகையாமே?"

"ஓமோம், பாவம்..."

"அவளைப்பற்றி அந்த நண்பர் சொன்னபோது எனக்கு உம்முடைய நினைவுதான் வந்தது..." - இதைச் சொன்னபோது அந்தக் கதாநாயகன் - எழுத்தாளன் தணிகாசலமாகத் தம்மையே நினைத்துப் பார்த்தார் சிற்றம்பல. மறு நிமிஷம் 'சை!" என்று உள்ளத்தை உதறி அந்த நினைவைக் கலைத்தார்.

"சும்மா போங்கள். உங்களுக்குக் கேலிதான்" என்று பூவழகி முகத்தை நெளித்தாள். சிற்றம்பலம் சாப்பிட்டு முடிந்து தட்டில் கையைக் கழுவியவர், நிமிர்ந்து அவளைப் பார்த்தார். அவருக்கு எதிரே மேசையில் சாடையாகச் சாய்ந்துகொண்டு அவள் நின்ற அழகு..... கதை பேசும் அவளுடைய கண்கள்; பட்டுப்போன்ற அழகிய கன்னங்கள்; இனிய உதடுகள்.... இவை இவை அவரை என்ன செய்கின்றன...?

சிற்றம்பலம் சடாரென்று முகத்தைத் திருப்பிக் கொண்டு, வேறு ஏதாவது கதைக்கலாமென்று முயற்சித்தார். என்னவோ உடம்பெல்லாம் பதறுவதுபோன்ற ஒரு உணர்ச்சி. உடம்பல்ல, உள் மனந்தான் பதறிக் கொண்டிருந்தது...

சிற்றம்பலத்தின் இதயத்திலே இப்படி ஒரு புகைப்படலம் பொங்கி எழுந்து குமுறுவதைப்பற்றி ஒன்றும் அறியாத பூவழகி, தன்னுடைய தோற்றத்திலே இப்படித் திடீரென்று ஒரு 'கவர்ச்சி' சிற்றம்பலத்தின் கண்களுக்குத் தெரிவதைப்பற்றி ஒன்றும் அறியாத பூவழகி சொன்னாள்; "போன கிழமை நானும் தங்கமும் சேர்ந்து போட்டோ எடுத்தோமென்று சொன்னேனல்லவா? அந்தப் போட்டோ இன்றைக்கு வந்திருக்கிறது..."

"எங்கே பார்ப்போம்" என்று வாய் திறந்து கேட்கச் சிற்றம்பலத்தினால் முடியவில்லை. குரல் நடுங்குமோ என்ற பயம். பேசாமல் கையை நீட்டினார்.

பூவழகியும் படத்தை நீட்டினாள்.

சிற்றம்பலம் அதை வாங்கியபோது -

நிச்சயமாக அவர் வேண்டுமென்று செய்யவில்லை. கை பதறிக் கொண்டிருந்ததாலோ - தற்செயலாகவோ அவளுடைய விரல்களோடு அவருடைய விரல்கள் உராய்ந்தன.

அவர் கையை எடுக்கவில்லை.

அவளால் எடுக்க முடியவில்லை.
அவளுடைய முகத்தை அவர் பார்க்கவில்லை. குனிந்து அந்த மெல்லிய அழகிய விரல்களைப் பார்த்தார். அவற்றை மெதுவாகப் பற்றினார். குனிந்து முத்தமிட்டார்...
முத்தமிட்டுவிட்டு நிமிர்ந்தவர், பூவழகியின் முகத்தைச் சந்தித்தபோது -

ஐயோ!

உதயத் தாமரை இப்படி உருக்குலைந்துவிட்டதே! அந்த முகத்தில் அவர் கண்ட உணர்ச்சிகள்....

உணர்ச்சியா!

உணர்ச்சி எங்கேயிருந்தது? அதன் உயிரே போய் போய்விட்டதே!

அதைப் பார்க்கமுடியாமல் படாரென்று முகத்தை மேசைமேல் கைகளுக்கிடையில் புதைத்து விட்டார்.

பூவழகி -

அவளுடைய நிலை அசாதாரணமானது. இரத்த ஓட்டமே நின்றுவிட்டதுபோலத் தோன்றியது.

தானே தடவி வளர்த்த பசு என்றாவது ஒருநாள் புலியாகி மாறிக் கடித்துவிட முடியுமா?

என்ன இது!

அவருடைய பிடியிலிருந்து விடுபட்ட கையினால், அவருடைய கன்னத்தில் 'ஒன்று' வைக்க அவளால் முடியவில்லை. வைக்கக்கூடியவள்தான்; ஆனால் அவரிடமா!

'பேயே, பிசாசே!' என்று அவளால் ஏச முடியவில்லை. ஏசக்கூடியவள்தான்; ஆனால் அவரிடமா!

உணவு கொண்டு வந்த பாத்திரங்களை அவளுடைய கைகள் ஒன்று சேர்த்தன.

"நான் போய் வருகிறேன்" என்று அவளுடைய வாய் சொல்லிற்று.

அவருக்கு அது கேட்டதா?

அவள் போய்விட்டாள்.

* * *

"கதை எப்படி முடியப்போகிறதென்று எனக்குத் தெரியும்!" என்றாள் கயல்விழி. இதுவரை அவள் இந்தக் கதையை வாசித்துக் கொண்டிருந்தாள்.

"எப்படி?" என்று கேட்டான் இளங்கோ. அவதான் இதை எழுதிக்கொண்டிருந்தவன்.

"கு. ப. ரா. எழுதியிருக்கிறாரே 'மோகினி மயக்க'மோ என்னவோ என்று ஒரு சிறுகதை. அதிலே ஒரு பெண். அடுத்த வீட்டுப் பையன் ஒருவன்; அவளை மாமி மாமி என்று அழைக்கிறவன். ஒருநாள் அவள் ஊஞ்சலிலே ஒய்யாரமாக உட்கார்ந்திருக்க, அந்த இளைஞன் வந்து எதிரே இருந்த ரவி வர்மா படத்து மோஹினி போல அவள் இருக்கிறாளென்று சொல்ல, அவளுடைய உள்ளத்திலும் ஒரு சலனம் ஏற்பட்டு, 'நெற்றியில் பொட்டு வைத்திருக்கிறேனா பார்' என்று கேட்கிறாள். அவன் அவளை நெருங்கியபோது.... எப்படியோ திடீரென்று மாயை விடுபட்டு அவன் திரும்பி ஓடி விடுகிறான் - அந்த இருவரும் இனிமேல் ஒருவரை ஒருவர் சந்திக்கமாட்டார்கள்; சந்திக்க விரும்பமாட்டார்கள், என்ற தத்துவத்துடன் கதை முடிகிறது. உங்கள் கதைக்கும் வேறு கதி ஏது?"

"கொஞ்சம் பொறு. 'கு. ப. ரா' ஒரு கோணத்திலிருந்து பார்த்தார். வேறு கோணங்களும் இருக்கின்றன" என்று சொல்லிவிட்டு இளங்கோ எழுதத் தொடங்கினான்.

* * *

மேசைமீது விழுந்த சிற்றம்பலத்தின் தலை வெகுநேரம் அப்படியே கிடந்தது. அது கனத்து இருண்டு பெரும் பாரமாகத் தோன்றிற்று.

அவர்மீது அவரே கொண்ட வெறுப்பு 'ச்சீ'... என்று இரண்டு மூன்று தரம் வாய்வழியே வெடித்தது. ஒவ்வொரு தரமும் தலையைத்தூக்கி மறுபடியும் மேசைமீது கிடந்த கைகள்மீது மோதிக் கொண்டார்.

வெகு நேரத்துக்குப் பிறகு எழுந்து அறைக்குள்ளாகவே அங்குமிங்குமாக நடந்தார்; மீண்டும் அறைக்கு வந்தார். எங்கெங்கே நடந்து திரிந்தாரென்பது வருக்கு நினைவில்லை.

வேதனைக் குவியல்களிலிருந்து விடுபடுவதற்காக அவர் எங்கேயோ ஓடிக்கொண்டிருந்தார்; கால்கள் அங்குமிங்குமாகச் சுற்றிக் கொண்டிருந்தன.

'ஐயையோ, நானா இதைச் செய்தேன்! நானா? நான் தானா?..."

கைகள் தலைமயிரைப் பற்றி இழுத்துச் சிதறவிட்டிருந்தன. அழுது அழுது கண்கள் வீங்கிவிட்டன.

'செல்லக்கிளி இதை அறிந்தால் -

'அவள் என்னைத் தேவாதி தேவனாக நினைத்திருக்கிறாளே, நான் நாயினும் கேடாகி நிற்கிறேனே'

அவர் உடம்பு நடுங்கி நெளிந்தது.

பூவழகி -

'அவள் என்னை இலட்சிய மனிதனாக எண்ணியிருந்தாளே, ஆண் குலத்தையே அவள் நம்பாதபடி செய்து விட்டேனே!...

'ஏன் செய்தேன்?

'அவளுடைய பெண்மையைச் சூறையாட வேண்டுமென்ற வெறி எனக்கு ஏற்பட்டதா?

'இல்லை; ஒருபோதும் இல்லை!

'பின்?

'ஒரு அன்பான குழந்தையை - அழகான குழந்தையை அணைத்துக் கொள்கிறோமே, அப்படியா?

'அல்ல; அப்படியுமல்ல!

'பின்?

'என்னவோ ஒன்றும் புரியவில்லை. உள்ளுணர்ச்சி எப்படியிருந்தபோதிலும் வெளிப் பார்வைக்கு.....

'கடவுளே, நான் ஏன் அப்படி நடந்தேன்? நானா? நான்தானா...?'

நல்லவேளை; எப்படியோ கடைசியில் நித்திரை என்ற நிம்மதி உலகத்திலே சிற்றம்பலம் புகுந்துவிட்டார். இல்லா விட்டால் மூளை கலங்கியிருக்கும்!

* * *

அடுத்தநாட் காலை பூவழகி சாப்பாடு கொண்டுவந்தபோது -

சிற்றம்பலம் திகைத்துப் போனார். அவர் அவளைக் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.

அவளுடைய முகத்தில் வழக்கமான - களங்கமற்ற அதே புன்சிரிப்பு.

சிற்றம்பலத்தினால் அவளுடைய முகத்தை எதிர்கொள்ள முடியவில்லை. கொஞ்சநேர மௌனத்திற்குப் பிறகு, எங்கேயோ பார்த்தபடி "என்னை மன்னித்து விட்டீரா?" என்று கேட்டார்.

"முதலில் என்னால் தாங்க முடியவில்லை. இரவு வெகுநேரம் வரை அதைப்பற்றியே மனத்தை அலட்டிக் கொண்டிருந்தேன். விடிந்து கண் விழித்தபோது மனமும் தெளிந்தது..."

நன்றிப் பெருக்காலோ என்னவோ சிற்றம்பலத்தின் கண்கள், கலங்கி நீரால் நிறைந்தன. தளதளத்த குரலில் அவர் சொன்னார்: "ஓமோம், அது நானல்ல... அந்தக் கயவனை அடுத்த கணமே கொன்று தீர்த்து விட்டேன். இனிமேல் எழுந்திருக்க முடியாதபடி!"

"நானும்... அந்த 'ஒரு கண'த்தை என்னுடைய வாழ்க்கை நிகழ்ச்சியிலிருந்து எடுத்துத் தார வீசிவிட்டேன்... விட்டுத் தள்ளுங்கள்; இனி அந்தப் பேச்சு வெண்டாம்; நினைக்கவும் வேண்டாம்."

சிற்றம்பலம் நிமிர்ந்து அவளுடைய முகத்தைப் பார்த்துச் சிரித்தார். ஒளியைக் கண்டதும் ஓடிவிடும் இருளைப்போல அவருடைய உள்ளத்தில் கவிந்திருந்த இருளெல்லாம் மறைந்து ஒரு நிறைவு ஏற்பட்டது.

அன்று அவர் தமது மனைவிக்கு எழுதிய கடிதத்தில் 'செல்லக்கிளி, இனி என்னால் உம்மைப் பிரிந்திருக்க முடியாது. அடுத்த ஞாயிற்றுக்கிழமை வருவேன்; புறப்பட்டுவர ஆயத்தமாக இரும்' என்று குறிப்பிட்டிருந்தார்.

(இச்சிறுகதை முதலில் கலைச்செல்வி இதழில் பிரசுரமானது. வரதரின் கயமை மயக்கம் (1960) தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது.)

Saturday, December 23, 2006

வாத்தியார் அழுதார் - வரதர்

பள்ளிக்கூடம் விடுகிற நேரம். நாலாம் வகுப்புக்குக் கடைசிப்பாடம் வரைதல். முருகேசு உபாத்தியாயர் கரும்பலகையில் ஒரு பெரிய பூசினிக்காயின் படம் வரைந்திருந்தார். அதைப்பார்த்து மாணவர்கள் கொப்பிகளில் வரைந்து கொண்டிருந்தார்கள்.

சுந்தரம் அந்த வகுப்பிலேயே முதலாம் பிள்ளை. அவனுடைய 'ஆட்டுப்புழுக்கைப்' பென்சிலாலே ஒருமாதிரி பூசினிக்காய்க்கு உருவம் போட்டு விட்டான். அதன் ஒரு பக்கம், மறுபக்கத்திலும் பார்க்கக் கொஞ்சம் 'வண்டி' வைத்துவிட்டாற் போலிருதது. அழித்துக் கீறலாமென்றால் அவனிடம் றப்பர் இல்லை. பக்கத்திலிருந்த 'தாமோரி'யிடம் இரவல் கேட்டான். தாமோரி, தன்னுடைய பெரிய 'ஆர்ட்டிஸ்ற் றோய்ங்' கொப்பியிலே புத்தம்புதிய வீனஸ் பென்சிலால், பூசினிக்காயென்று நினைத்துக் கொண்டு பனங்காய் மாதிரி ஏதோ ஒரு உருவம் போட்டுக் கொண்டிருந்தான். சுந்தரம் வடிவாகக் கீறியிருப்பதைப் பார்க்கப் பார்க்க அவனுக்கு எரிச்சலாக இருந்தது. ஒரு பக்கம் கொஞ்சம் வண்டியாக இருப்பதையும் சுந்தரம் அழித்துத் திருத்துவதை அவன் பொறுப்பானா? "போடா! என்னுடைய றப்பர் தேய்ஞ்சுபோம்; நான் தரமாட்டேன்" என்றான்.

சுந்தரம் விரலிலே சாடையாக எச்சியைத் தொட்டு பிழையான கோட்டை அழிக்க முயன்றான். இதுகூடப் பொறுக்கவில்லை தாமோரிக்கு. டக்கென்று எழுந்து, "வாத்தியார்!" என்று ஒரு பெரிய சத்தம் போட்டான்.

மத்தியான இலவச போசனத்தை அரசாங்கத்தார் நிறுத்தப் போவதைப் பற்றிப் பத்திரிகையிலே வாசித்துக் கொண்டிருந்த உபாத்தியாயர் தாமோரி போட்ட சத்தத்தில் நிமிர்ந்து "என்னது?" என்றார்.

"வாத்தியார், இங்கே சுந்தரம்....... எசிலைத் தொட்டுப் படத்தை அழிக்கிறான்!"

முருகேசு உபாத்தியாயர் அந்த ஊர் மனுசர்தான். அவருக்குப் பணக்கார வீட்டுப் பிள்ளையான தாமோரியையும் தெரியும்;தந்தையை இழந்தவுடன் ஏழைப் பிள்ளையாகிவிட்ட சுந்தரத்தையும் தெரியும். அதோடு இருவரின் குணத்தையும் நன்றாக அறிவார்.

"இங்கே வா சுந்தரம்!" என்றார்.

படபடக்கும் நெஞ்சோடும், அதைப் பிரதிபலிக்கும் முகத்தோடும், இயற்கையாகவே மெலிந்த உடம்போடும் சுந்தரம் வந்தான்.

"நீ எச்சில் தொட்டு அழித்தாயா?"

சுந்தரம் பதில் சொல்லுமுன்பே தாமோரி எழும்பி, "நான் பார்த்தேன் வாத்தியார்!" என்றான்.

"நீ இரடா அங்கே! உன்னை யாரடா கூப்பிட்டது?" என்று விழித்துப்பார்த்த உபாத்தியாயரின் கண்ணில் பொறி பறந்தது! அதைப் பார்த்ததும் சுந்தரத்தின் உடம்பு பதறத் தொடங்கிவிட்டது.

ஆனால் திரும்பிச் சுந்தரத்தைப் பார்த்த உபாத்தியாயரின் முகத்தில் கருணை தவழ்தது. "இங்கே வா, சுந்தரம்" என்று அவாஇப் பக்கத்தில் கூப்பிட்டு முதுகில் லேசாகத் தட்டினார். "நீ எச்சில் போட்டாயா?" என்றார்.

"என்னிடம் றப்பர் இல்லை வாத்தியார்; அம்மாவிடம் காசும் இல்லை!" என்ற சுந்தரத்தின் கண்களில் நீர் ந்றைந்து விட்டது.

"றப்பர் இல்லாவிட்டால் எச்சில் போடக்கூடாது..." என்றார் உபாத்தியாயர். ஆனால் வேறு என்ன செய்யச் சொல்லலாம் என்று யோசித்தவருக்கு ஒரு யோசனையும் ஓடவில்லை. குனிந்து பார்த்தவர் சுந்தரத்தினுடைய கால்சட்டைப் பையுக்குள்ளே என்னவோ மொத்தமாகத் தள்ளிக்கொண்டு கிடப்பதைக் கவனித்தார்; "கால்சட்டைப் பையுக்குள்ளே என்ன வைத்திருக்கிறாய்?"

சுந்தரம் பரிதாபமாக உபாத்தியாயரைப் பார்த்தான். அந்தப் பார்வை அவரை என்னவோ செய்தது. "ஏன் பயப்படுகிறாய்? நீ நல்ல பையன்; பிழையான காரியம் செய்ய மாட்டாய். பயப்படாமல் சொல்லு!" என்றார்.

சுந்தரம் அப்போதும் பதில் சொல்லவில்லை. தலையைக் குனிந்தான். பொல பொலவென்று நாலு சொட்டுக் கண்ணீர் அவன் காலடியில் விழுந்தது. உபாத்தியாயர் அவனை இன்னும் கிட்ட இழுத்து அவன் முதுகைத் தடவிக்கொடுத்து "அழாதே சுந்தரம், அதற்குள்ளே என்ன, புத்தகமா?" என்றார்.

சுந்தரம் இல்லையென்று தலையசைத்தான். பிறகு துடித்துக் கொண்டிருந்த உதடுகளைக் கஷ்டத்துடன் திறந்து மெதுவாக, "வாத்தியார்.... அது... அது... கொஞ்சப் பாண்!" என்றான்.

"ஏன், நீ சாப்பிடவில்லையா?.... பசிக்கவில்லையா?"

"கூப்பன் அரிசி விலை கூடிப்போச்சென்று அம்மா அரிசி வாங்கவில்லை. வீட்டிலே இருக்கிற தங்கச்சிக்கு சாப்பிடக் கொடுக்கத்தான் அதை வைத்திருக்கிறேன்...."

'நீ போ சுந்தரம்' என்று உபாத்தியாயர் வாயால் சொல்லவில்லை; அவரால் சொல்ல முடியவில்லை. 'அண்ணை பள்ளிக்கூடத்தால் வரும்போது பாண் கொண்டுவருவார் என்று, பசியோடு வழி பார்த்திருக்கும் அந்த மூன்று வயதுக் குழந்தையின் வயிறுமல்லவா இனிமேல் துடிக்கப்போகிறது!' சுந்தரத்தைப் போகும்படி தலையசைத்து விட்டு, உபாத்தியாயர் சால்வைத் தலைப்பினால் தமது கண்களை ஒற்றிக்கொண்டார்.

சுந்தரம்! ..... உன்னைப்போல எத்தனை சுந்தரங்கள்!

(இச்சிறுகதை முதலில் ஆனந்தன் இதழில் பிரசுரமானது. வரதரின் கயமை மயக்கம் (1960) தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது.)

Friday, December 22, 2006

கற்பு - வரதர்

வரதர் எழுதிய கற்பு பரவலான கவனம் பெற்ற சிறுகதைகளில் ஒன்று.
அச்சிறுகதையும் அதுபற்றிய கா. சிவத்தம்பி, க. குணராசா ஆகியோரது குறிப்புக்களும்.

கற்பு

மாலை நாலரை மணி. பிள்ளையார் கோயில் கணபதி ஐயர் வீட்டின் முன் விறாந்தையிலே மூர்த்தி மாஸ்டரும் ஐயரும் கதைத்துக் கொண்டிருக்கிறார்கள். எங்கெல்லாமோ சுற்றி வந்து கடைசியில் இலக்கிய உலகத்திலே புகுந்தார்கள்.

"மாஸ்டர், நீங்கள் 'கலைச்செல்வி'யைத் தொடர்ந்து படித்து வருகிறீர்களா?" என்று கேட்டார் ஐயர்.

"ஓமோம், ஆரம்பத்திலிருந்தே 'பார்த்து' வருகிறேன். ஆனால் எல்லா விஷயங்களையும் படிக்கிறேனென்று சொல்ல முடியாது. ஏன், என்ன விஷேசம்?"

"கலைச்செல்வி' பழைய பிரதி ஒன்றை இன்றுதான் தற்செயலாகப் படித்துப் பார்த்தேன். அதிலே ஒரு சிறுகதை..."

"யார் எழுதியது?"

"எழுதியவர் பெயரைக் கவனிக்கவில்லை. அந்தச் சம்பவந்தான் மனத்தை உறுத்திக்கெண்டேயிருக்கிறது."

"சொல்லுங்கள், நினைவு வருகிறதா பார்க்கலாம்?"

"மூன்றாம் வருஷம் இலங்கையில் பெருவெள்ளம் ஏற்பட்டதல்லவா; அந்தச் சூழ்நிலையை வைத்துக் கதை எழுதப்பட்டிருக்கிறது. குளக்கட்டை உடைத்துக்கொண்டு ஒரு கிராமத்துக்குள் வெள்ளம் பெருகி வருகின்றது; சனங்கள் உயரமான இடத்தைத் தேடி ஓடுகிறார்கள். அந்த ஊரில் ஒரு பணக்காரனின் வீட்டுக்கு 'மேல்வீடு'ம் இருக்கின்றது; அங்கே அவன் தனியாக இருக்கின்றான்; வெள்ளத்துக்கு அஞ்சி ஒரு ஏழைப்பெண் - இளம் பெண் அந்த மேல் வீட்டுக்குச் செல்கிறாள்; பணக்காரன் அவளைப் பதம் பார்க்க முயல்கிறான்; அவள் இசையவில்லை; அவன் பலாத்காரம் செய்தேனும் அவளை அடையத் துணிந்து விட்டான். அவள் உயிரைவிடக் கற்பையே பெரிதாக மதிப்பவள். மேல் வீட்டிலிருந்து கீழே குதித்து உயிரைத் துறந்தாள். கற்பைக் காப்பாற்றிக் கொண்டாள்.... இந்தக் கதையைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் மாஸ்டர்?"

"என்ன நினைக்கிறது? புராண காலத்தில் இருந்து திருப்பித் திருப்பிப் படித்த 'கருத்து'த்தான். கதையை அமைத்த முறையிலும் வசன நடையின் துடிப்பிலுந்தான் இந்தக் கதைக்கு வாழ்வு கிடைக்கும். நான் படிக்கவில்லை. படித்தால்தான் அதைப்பற்றிச் சொல்லலாம்."

"நான் கதைக்கு விமர்சனம் கேட்கவில்லை மாஸ்டர். புராண காலத்திலிருந்து படித்ததாகச் சொன்னீர்களே, அந்தக் 'கருத்தை'ப்பற்றித்தான் உங்கள் அபிப்பிராயம் என்ன என்று கேட்கிறேன்."

"எதைக் கேட்கிறீர்கள் ஐயா? தனது கற்பைக் காப்பாற்ற உயிரைத் துறந்தாளே, அதைப்பற்றியா?"

"ஓமோம், அதையேதான்."

"ஒரு பெண்ணின் முக்கியமாகத் தமிழ்ப் பெண்ணின் சிறப்பே அத்ல்தானே இருக்கின்றது! மானம் அழிந்தபின் வாழாமை இனிதென்பதல்லவா தமிழன் கொள்கை?"

ஐயர் பெருமூச்சு விட்டார். பிறகு, "நீங்களும் இப்படிச் சொல்கிறீர்களா?" என்று கேட்டார்.

மூர்த்தி மாஸ்டர் திகைத்தார். தான் என்ன தவறுதலாகச் சொல்லிவிட்டாரா? இந்த ஐயர் என்ன இப்படிக் கேட்கிறார்?

ஒரு நிமிஷ நேரம் மௌனம் நிலவிற்று. ஏதோ எண்ணித் துணிந்துவிட்டவர்போல கணபதி ஐயரே மீண்டும் மௌனத்தைக் கலைத்தார்.

"மாஸ்டர், எனக்கும் என் மனைவிக்கும் மட்டும் தெரிந்த ஒரு இரகசியத்தை உங்களுக்குச் சொல்லப்போகிறேன் - உங்களுக்குச் சொல்லலாம்; சொல்வதால் ஒரு தீமையும் ஏற்படாது. இதைக் கேட்டபிறகு 'கற்பு' பிரச்சினையைப்பற்றிப் பேசுவோம்.

* * *

போனவருஷம் பெரியந்தனை முருகமூர்த்தி கோயிலில் நான் பூசை செய்து கொண்டிருந்தது உங்களுக்குத் தெரியும். அங்கே தமிழர்கள் தொகை ஐம்பது பேர்கூட இருக்காது. விசேட தினங்களுக்கு மட்டும் பிற இடங்களிலிருந்தெல்லாம் வந்து கூடுவார்கள். சிங்களவர்கூடப் பலர் கோயிலுக்கு வந்து அருச்சனை செய்விப்பது வழக்கம்.

சிங்களவர் - தமிழர் கலகம் துவங்கினவுடனே அங்கே இருந்த தமிழர்களில் முக்கால்வாசிப் பேரும் யாழ்ப்பாணத்துக்கு ஓடிவந்துவிட்டார்கள். நான் பூசையை விட்டுவிட்டு எப்படிப் போகமுடியும்? என் மனைவியைப் போகும்படி சொன்னேன். எனக்கு வருவது தனக்கும் வரட்டுமென்று அவள் மறுத்துவிட்டாள். சிங்களவரும் அக்கோயிலிலே கும்பிட வரும் வழக்கம் இருந்ததால் கோயில் விஷயத்தில் தலையிட மாட்டார்கள். எங்களுக்கும் ஆபத்து நேராது என்ற துணிவில், அவளை மேலும் வற்புறுத்தாமல் விட்டுவிட்டேன்.

ஒரு புதன்கிழமை, அன்று பேபிநோனா என்ற சிங்களக் கிழவி - அவள் எங்களோடு நன்கு பழகியவள். கோயிலுக்கும் நாள் தவறாமல் வருகிறவள் - அவள் சொன்னாள். "நீங்கள் இனி இங்கேயிருப்பது புத்தியில்லை ஐயா. காலியிலிருந்து சில முரடர்கள் மூன்று லொறிகளில் வருகிறார்களாம். வருகிற வழியெல்லாம் தமிழர்களை இல்லாத கொடுமை செய்கிறார்களாம். ந்றிரவோ நாளையோ இந்தப்பக்கம் வரக்கூடுமென்று கதைக்கிறார்கள். நீங்கள் இப்போதே புறப்பட்டு பொலீஸ் ஸ்டேசனுக்குப் போய் விடுங்கள். பிறகு பொலீஸ் துணையோடு கொழும்புக்குச் செல்லலாம்" என்றாள்.

அவள் சொன்னதைக் கேட்ட பிறகு 'அப்பனே முருகா! என்னை மன்னித்துக்கொள்' என்று மனதுக்குள் வேண்டிக்கொண்டு கையோடு கொண்டு போகக்கூடிய பொருள்களை இரண்டு பெட்டிகளுள் சேகரித்தோம். என் மனைவியின் நகைகளையும் - நூலில் கட்டிய தாலியொன்றைத் தவிர - எல்லாவற்றையும் கழற்றிப் பெட்டியில் பூட்டினோம். இந்த ஆயத்தங்கள் செய்வதற்குள் மாலை ஐந்து மணியாகி விட்டது. நாங்களும் புறப்பட ஆயத்தமானபோது பேபி நோனா அவசரம் அவசரமாக ஓடிவந்தாள். "ஐயா, ஐயா, சில்வாவும் வேறு இரண்டு பேருமாக வாறான்கள். அம்மாவை அவன்கள் கண்ணில் படாமல் எங்கேயாவது ஒளித்திருக்கச் சொல்லுங்கோ! கேட்டால் 'நேற்றே ஊருக்குப் போய்விட்டா' என்று சொல்லுங்கோ. நான் இங்கே நின்றால் எனக்கும் ஆபத்து; உங்களுக்கும் ஆபத்து, கவனம் ஐயா" என்று சொல்லி விட்டு பேபி நோனா ஓடி மறைந்து விட்டாள்.

சில்வாவை எனக்குத் தெரியும்; ஆள் ஒரு மாதிரி. 'ஐயா, ஐயா' என்று நாய்மாதிரிக் குழைந்து ஐம்பது சதம், ஒரு ரூபா என்று இடைக்கிடை என்னிடம் வாங்கியிருக்கிறான். ஆள் காடைத் தரவளியாதலால் நானும் பட்டும் படாமலும் நடந்து வந்திருக்கிறேன். இரண்டொரு நாள் என் மனைவியை றோட்டில் தனியாகக் கண்டபோது அவனுடைய பார்வையும் சிரிப்பும் நன்றாக இருக்கவில்லையென்று அவள் சொல்லியதுண்டு.

இப்போது அவன் வருகிறானென்றால்...

எனக்கு ஒருகணம் ஒன்றும் தோன்றவில்லை. யோசிக்கவும் நேரமில்லை. வீட்டுக்குள் உயரத்திலே பரண் மாதிரி மூன்று மரங்களைப் போட்டு அதன்மேல் சில பழைய பெட்டிகளைப் போட்டிருந்தது. என் மனைவியை நான் தூக்கி அந்த மரங்களின்மேல் விட்டு மெதுவாக அந்தப் பெட்டிகளின் பின்னால் மறைந்திருக்கும்படி விட்டேன். பிறகு எங்கள் பயணப் பெட்டிகளை எடுத்துச் சற்று மறைவாக ஒரு மூலையில் வைத்துவிட்டேன். பிறகு, முன் விறாந்தைப் பக்கம் வந்தேன். நானும் வர அந்தக் காடையர்களும் வாயிலில் நுழைந்தார்கள். எனக்கு உள் மனது நடுங்க ஆரம்பித்துவிட்டது. இருந்தாலும் சமாளித்துக் கொண்டு, "என்ன சில்வா, இந்தப் பக்கம்?" என்று சிரிக்க முயன்றேன்.

"சும்மாதான், நீங்கள் இருக்கிறீர்களா, இல்லாவிட்டால் யாழ்ப்பாணத்துக்குக் கம்பி நீட்டி விட்டீர்களா என்று பார்க்கத்தான் வந்தேன்" என்றான்.

"முருகனை விட்டு நான் எங்கேதான் போகமுடியும்?" என்று சொன்ன என் குரலே தெளிவாக இல்லை.

"எங்களுக்குக் கொஞ்சம் தண்ணீர் குடிக்க வேண்டும்" என்றான் சில்வா. நான் சரியென்று குசினிப் பக்கம் போனேன். எனக்குப் பின்னால் அவர்கள் தொடர்ந்து வருவதை உணர்ந்தேன். ஆனாலும் திரும்பிப் பார்க்கவில்லை. ஒரு செம்பில் தண்ணீரை வார்த்துக் கொண்டு நிமிர்ந்தேன். எனக்கு முன்னால் அந்த மூன்று காடையர்களும் நின்றார்கள். செம்பைப் பிடித்த எனது கையில் நிதானமில்லை.

"அதுசரி அயா, எங்கே அம்மாவைக் காணவில்லை?"

நான் திரும்பித் திரும்பி மனத்துக்குள் ஒத்திகை பார்த்து வைத்திருந்த வசனங்களை ஒப்புவித்தேன்: "அவ நேற்றே ஊருக்குப் போய்விட்டாவே."

'பளீர்' என்று என் கன்னத்தில் ஒரு அறை விழுந்தது! செம்பும் தண்ணீரும் உருண்டு சிதறியது. என் கண்களுக்குப் பார்வை வருமுன்பே என் மடியில் கையைப் போட்டு ஒருவன் இழுத்தான்; மற்றக் கையினால் வயிற்றில் ஒரு குத்து விட்டான்.

"தமிழ்ப் பண்டி, பொய்யா சொல்லுகிறாய்? இன்று காலையிற்கூட உன் பொண்டாட்டியைப் பார்த்தேனே!"

மற்றவன் கேட்டான்: "சொல்லடா! அவளை யார் வீட்டில் கொண்டு போய் ஒளித்து வைத்திருக்கிறாய்?" எனக்கு நெஞ்சிலே கொஞ்சம் தண்ணீர் வந்தது. இந்த முரடர்கள் நான் அவளை வேறு யார் வீட்டிலோ ஒளித்து வைத்திருப்பதாக நினைத்துவிட்டார்கள். ஆகையால் இந்த வீட்டில் அதிகம் பார்க்க மாட்டார்கள். என் உயிர் போனாலும் சரி; அவள் மானம் நிலைக்கட்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

"என்னடா பேசாமல் நிற்கிறாய்?"

குத்து! அடி! உதை!
குத்து! அடி! உதை!
குத்து! அடி! உதை! ........

நான் இயக்கமின்றிக் கீழே விழுந்து விட்டேன். அம்மட்டிலும் அவர்கள் விடவில்லை. இரண்டுபேர் என்னைப் பிடித்துத் தூக்கினார்கள்.

"அவள் இருக்கிற இடத்தை நீ சொல்ல மாட்டாய்? ... கடைத் தெருப்பக்கம் காலியிலிருந்து லொறியில் வந்திருக்கிறான்கள். அவன்களிடம் உன்னைக் கொண்டுபோய்க் கொடுத்தால், உன்னைத் தலை கீழாகக் கட்டித் தூக்கித் தோலை உரித்த பிறகு கீழே நெருப்பைக் கொழுத்தி சுடுவான்கள், உனக்கு அதுதான் சரி!..... வாடா!" என்று சொல்லி இழுத்தார்கள். என்னால் நடக்கவும் முடியவில்லை. அவ்வளவு அடி அகோரம். அவர்கள் என்னை இழுத்துக் கொண்டு நடுவீட்டுக்கு வந்துவிட்டார்கள். மேலே என் மனைவி... அந்த அறையையும் கடந்து வெளியே காலை வைத்து விட்டார்கள்.

"நில்லுங்கள்! நில்லுங்கள்!" என்ற கூச்சலோடு என் மனைவி பரணிலிருந்து குதித்தாள்.

"அவரை விட்டு விடுங்கள்!" என்று அலறிக் கொண்டே என்னிடம் ஓடி வந்தாள்.

அவர்கள் என்னை விட்டு விட்டார்கள். ஆறு முரட்டுக் கரங்கள் அவளை மறித்துப் பிடித்தன.

பிறகு......

என்னை ஒரு மேசையின் காலோடு பின்கட்டாகக் கட்டினார்கள். அவளை - என் மனைவியை - குசினிப்பக்கம் இழுத்துக் கொண்டு போனார்கள். இரண்டொரு நிமிஷங்களில் அவளுடைய அலறல் கேட்டது. பிறகு அவள் அலறவில்லையோ, அல்லது நாதான் இரத்தம் கொதித்து, மூளை கலங்கி, வெறிபிடித்து, மயங்கி விட்டேனோ!

மறுபடி எனக்கு நினைவு வரும்பொழுது அதே மேசையடியில் யாரோ ஒருவருடைய மடியில் படுத்திருபதை உணர்ந்தேன். என்னை அவ்விதம் ஆதரவாகத் தூக்கி மடியில் வைத்திருப்பது யாரென்று அறிய ஒரு ஆவல். கண்களைத் திறந்து பார்த்தேன்.

என் மனைவி!

மானம் அழிந்த என் மனைவி......

எத்தனையோ நூற்றாண்டுகளாக ஊறிப்போன 'கருத்து' என்னைச் சித்திரவதை செய்தது. மானத்தை இழந்த என் மனைவியின் மடிமீது தலை வைத்துப் படுத்திருக்கிறேனே; ...... என் உடம்பு கூனிக் குறுகியது. எழுந்து வெளியே நிலத்தில் விழுந்துவிட வேண்டுமென்று மனம் உன்னிற்று.

என் முகத்திலே ஒரு சொட்டுக் கண்ணீர்; இன்னொன்று, இன்னொன்று. என் முகமும் அவள் கண்ணீரால் நனைய, மனம் சிந்திக்கத் தொடங்கியது.

மூன்று விஷப் பாம்புகள் அவளைக் கடித்து இன்பத்தை உறிஞ்சின. அவள் உடலும் உள்ளமும் வேதனையால் துடித்தன. எரிந்து போகிற உடலை யோரோ என்னவோ செய்தார்கள். மனம் சிறிதும் சம்பந்தப்படாதபோது அவளுடைய மானம் போய்விடுமா? செய்யாத குற்றத்துக்கு அவள் தண்டனை அடைய வேண்டுமா? மனம் சம்பந்தப்படாதபோது வெறும் உடலுக்கு நேர்ந்த தீங்கினால் மானம் அழிந்து விடுமென்றால் பிரசவத்துக்காக டாக்டரிடம் போகும் பெண்களெல்லாம் -

என் மனத்தில் எழுந்த ருவருப்பை வெளியே இழுத்தெடுத்துத் தூர வீசினேன். பரிதாபப்படவேண்டிய, பாராட்டப்படவேண்டிய என் மனைவியின் பெருமை என் நெஞ்செல்லாம் நிறைந்தது. மெதுவாக அவள் கைகளைப் பற்றி என் மார்போடு அணைத்துக் கொண்டேன்.

பிறகு பொலீஸ் வந்தது. பேபி நோனாதான் அந்த உதவியைச் செய்தாளென்று பின்னால் தெரிந்து கொண்டேன். என்னவோ கஷ்டமெல்லாம் மட்டு, அகதி முகாமில் கிடந்துழன்று எப்படியோ இங்கே வந்து சேர்ந்தோம்.......

* * *

"இப்பொழுது சொல்லுங்கள் மாஸ்டர். பலாத்காரத்தினால் ஒரு பெண்ணின் உடல் ஊறு செய்யப்பட்டால் அவள் மானம் அழிந்துவிடுமா? அதற்காக அவள் உயிரையும் அழித்துவிடவேண்டுமா? ..... அப்படி உயிரை விட்டவளைப் பத்தினித் தெய்வமென்று கும்பிட வேண்டுமா? கணவன் இறந்தவுடன் உடன்கட்டை ஏறியவள் - அப்படிச் செய்வதே கற்புடைய மகளிர் கடமை என்ற சமூகக் கருத்தினால் உந்தப்பட்டு ஏற்றப்பட்டவள் பத்தினித்தெய்வமா, அல்லது பகுத்தறிவற்ற சமுதாயத்துக்குப் பலியான பேதையா? ..... சொல்ல்ங்கள் மாஸ்டர்!..."

கணபதி ஐயர் உணர்ச்சி மேலீட்டால் பொருமினார்.

"என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் ஐயா! இப்படித்தான் பரம்பரை பரம்பரையாக இரத்தத்தில் ஊறிப்போன பல விஷயங்களைப்பற்றிச் சிந்திக்காமலே அபிப்பிராயம் கொண்டுவிடுகிறோம். நான் கூட எவ்வளவு முட்டாள்தனமாக அபிப்பிராயம் சொல்லி விட்டேன்..... ஐயா, பகுத்தறிவு, பகுத்தறிவு என்று சொல்லிக்கொண்டு தேவையில்லாத விஷயங்களிலெல்லாம் வாய்வீச்சு வீசுகிற பலரை எனக்குத் தெரியும். ஆனால் உண்மையான ஒரு பகுத்தறிவுவாதையை இன்றைக்குக் கண்டு பிடித்துவிட்டேன்" என்று சொன்னார் மூர்த்தி மாஸ்டர். ஐயர் வீட்டுச் சுவரிலே இருந்த மகாத்மா காந்தியின் படம் - அதிலே ஐயரின் சாடை தெரிவதுபோலத் தோன்றியது மூர்த்தி மாஸ்டருக்கு.

("கற்பு" முதலில் மத்தியதீபம் இதழில் வெளியானது. வரதரின் கயமை மயக்கம் (1960) இல் இடம்பெற்றுள்ளது. செம்பியன் செல்வன் எழுதிய ஈழத்துத் தமிழ்ச் சிறுகதை மணிகள் (1973) நூலில் வரதர் பற்றிய குறிப்போடு வெளிவந்தது.)


கா. சிவத்தம்பி - மலரும் நினைவுகள் (1996) நூல் முன்னுரையில்,

இவரது சிறுகதைத் தொகுதியான கயமை மயக்கம் 1960இல் வெளிவந்தது. அத்தொகுதியில் இடம்பெறும் "கற்பு" எனும் சிறுகதை. 1956 இனக்கலவரத்தின் பொழுது கற்பழிக்கப்பட்ட தனது மனைவியை ஏற்றுக் கொள்ளும் கோயிற் பூசகரின் மனத்திண்மை பேசப்படுகிறது. இந்தச் சிறுகதை இலக்கிய விமர்சனங்கள் முதல் சமூகவியலாளர் வரை பலரால் எடுத்துப் பேசப்படுவதாகும்.


செங்கை ஆழியான் க. குணராசா - ஈழத்துச் சிறுகதை வரலாறு (2001) நூலில்,

இலங்கையில் ஏற்பட்ட இனக்கலவரச் சூழ்நிலையை அடிப்படையாகக் கொண்டு கற்பு, வீரம் என்றிரு சிறுகதைகளை வரதர் எழுதியுள்ளார். கற்பு வரதருக்குப் பெருமை சேர்த்த சிறுகதை எனலாம். பலாத்காரத்தினால் ஒரு பெண்ணுடல் ஊறு செய்யப்பட்டால் அவள் மானம் அழிந்து விடுவதில்லை என்ற கருத்தினைக் கூறக் கற்பு உருவாகியது.

புரட்சிகரமான சமூகக் கருத்தொன்றினைப் பேசுகின்ற கற்புச் சிறுகதை காலதேச வர்த்தமானங்களைக் கடந்த சிறுகதையாகப்படுகிறது. பாலியல் வல்லுறவுக்குள்ளான பெண்கள் சமூகத்தில் தற்கொலை செய்து தம்மை அழித்துக் கொள்கிறார்கள். இச்சமூகம் அதை விரும்புவது போலப்படுகின்றது. கணபதி ஐயரின் வீட்டுக்குள் நுழைந்த காடையர்கள் அவரைக் கட்டிவைத்து விட்டு அவர் மனைவியைப் பலாத்காரம் செய்து விடுகிறார்கள். நன்கு பழகிய சில்வாவே முன்னின்று இந்த ஈனச் செயலைச் செய்கிறான்.

'செய்யாத குற்றத்திற்கு அவள் தண்டனை அடைய வேண்டுமா? ம்னம் சம்பந்தப்படாதபோது வெறும் உடலுக்கு நேர்ந்த தீங்கினால் மானம் அழிந்து விடுமென்றால்.....' பகுத்தறிவற்ற சமுதாயத்திற்குப் பலியான பேதை மனைவியை எதுவித மனக்காயமுமின்றி கணபதி ஐயர் ஏற்றுக் கொள்கிறார். இதுதான் கற்பு சிறுகதை. இச்சிறுகதை கூறுகின்ற சமூகச்செய்தி இன்று மட்டுமல்ல, என்னும் நமது யுத்தச் சூழலில் வாழ்கின்ற சமூகத்திற்கு தேவையென்பேன். புதுமைப்பித்தனின் சாபவிமோசனம் சிறுகதையில் சந்தர்ப்பச் சதியால் அகல்யை இந்திரனால் மானமிழக்கிறாள். 'சதர்ப்பம் செய்த சதிக்கு பேதை நீ என்ன செய்வாய்?' என்கிறார் கௌதமர். அது அவள் கல்லாகிச் சாபவிமோசனமடைந்ததன் பிறகு. ஆனா, கற்பில் கணபதி ஐயர் அவ்வாறு நடந்து கொள்ளவில்லை. அவளைக் கடியவில்லை. சாபமிடவில்லை. வாழ்க்கையில் எதுவுமே சகசமாக்கிக் கொள்கிறார். கௌதமரிலும் பார்க்க வரதரின் கணபதி ஐயர் ஒருபடி உயர்வான பாத்திரம்.

Saturday, December 02, 2006

மூத்த எழுத்தாளர் வரதர்

ஈழத்தின் இலக்கிய வரலாறு எழுதுகையில் தவிர்க்க முடியாத பெயர்களில் ஒன்று 'வரதர்' என்பது. சிறுகதை, புதுக் கவிதை, குறுநாவல், இதழியல், பதிப்புத்துறை என இலக்கியத்தின் எத்துறையை எடுத்தாலும் முத்திரை பதித்தவர் வரதர்.

'வரதர்' என்கிற தி. ச. வரதராசன் 1924 இல் யாழ்ப்பாணத்திலுள்ள பொன்னாலையில் பிறந்தார். சிறு வயது முதல் நிறைய வாசிக்கத் தொடங்கிய இவர் மகாபாரதம், இராமாயணம் போன்ற இதிகாச - புராணக் கதைகளில் ஆரம்பித்துப் பின்னர் ஆனந்த போதினி, பிரசண்ட விகடன், கலைமகள் போன்ற சஞ்சிகைகளையும் பலவிதமான நூல்களையும் வாசிக்கத் தொடங்கினார். தொடர்ச்சியான இந்த வாசிப்பே அவரை எழுதத் தூண்டியது எனலாம்.

ஈழத்தின் மூத்த எழுத்தாளர் பலரையும் போல வரதர் எழுதத் தொடங்கியதும் ஈழகேசரி (1930-58)யிற் தான். ஈழகேசரி கல்வி அனோபந்தத்தில் கட்டுரைகள் எழுதி வந்தார். பின்னர் ஈழகேசரி ஆண்டுமலரில் வெளிவந்த 'கல்யாணியின் காதல்' வரதரின் முதற் சிறுகதை.

தொடர்ச்சியாக எழுதி வந்த வரதர் அவரையொத்த எழுத்தாளர்களுடன் தொடர்பு வைத்திருந்தார். அவர்களை இணைத்து ஓர் எழுத்தாளர் சங்கம் உருவாக்கும் ஆவல் வரதருள் எழுந்தது; செயல்வடிவம் பெற்றது.
1943. 06. 13 இல் 'தமிழிலக்கிய மறுமலர்ச்சிச் சங்கம்' உருவானது. இந்த வகையில் ஈழத்தின் முதல் எழுத்தாளர் சங்கத்திற்கு அடித்தளமிட்ட பெருமை பெறுகிறார் வரதர்.

இதே ஆண்டில் (1943) ஈழகேசரியில் வரதர் எழுதிய 'ஓர் இரவினிலே' எனும் வசன கவிதையே ஈழத்தின் முதற் புதுக்கவிதை எனப்படுகிறது.
தமிழிலக்கிய மறுமலர்ச்சிச் சங்கம் முதலில் 'மறுமலர்ச்சி' எனும் கையெழுத்துச் சஞ்சிகையை வெளியிட்டது. 1946 பங்குனியில் மறுமலர்ச்சி முதல் இதழ் அச்சிடப்பட்டது. வரதர், கா.மதியாபரணம், நாவற்குழியூர் நடராசன், ச.பஞ்சாட்சரசர்மா, க.ஆ.சரவணமுத்து ஆகிய ஐவருமே முதல் போட்டு மறுமலர்ச்சியைத் தொடங்கினர்.

மறுமலர்ச்சி யாருக்குச் சொந்தம் என்பது பிரச்சினையாகி நீதிமன்றம் வரை சென்று மீண்டே மறுமலர்ச்சி வெளியானது. மறுமலர்ச்சி வெளியீட்டாளராக நடராசன் இருந்தார். ஆசிரியர்களாக வரதரும் அ.செ.முருகானந்தனும் இருந்தனர். 18 ஆவது இதழிலிருந்து அ.செ.முருகானந்தனுக்குப் பதிலாக பஞ்சாட்சரசர்மா பணியாற்றினார்.

1946 பங்குனி முதல் 1948 ஐப்பசி வரை 'மறுமலர்ச்சி' 24 இதழ்கள் வெளியாகின. ஈழத்துச் சிறுகதையின் தனித்துவத்திற்கும் 50களில் ஏற்பட்ட ஈழத்து இலக்கிய எழுச்சிக்கும் அடித்தளமிட்டது மறுமலர்ச்சி தான் என்றால் அது மிகையாகாது.

1952 இல் வரதர் ஆனந்தன் எனும் சஞ்சிகையை ஆரம்பித்தார். இதுவும் ஓர் இலக்கிய இதழே. ஆரம்பத்தில் யாழ்ப்பாணனும் பின்னர் புதுமைலோலனும் ஆனந்தனின் இணையாசிரியராக இருந்தனர்.

1955 இல் வரதர் மஹாகவியை இணையாசிரியராகக் கொண்ட 'தேன் மொழி'யை வெளியிட்டார். ஈழத்தில் கவிதைகளுக்கென வெளிவந்த முதற் சஞ்சிகை தேன்மொழி. தேன்மொழி ஆறு இதழ்களே வெளியாகின.
இவை தவிர 'வெள்ளி' எனும் சஞ்சிகையும் 'புதினம்' எனும் வார இதழும் கூட வரதரால் வெளியிடப்பட்டன. பொருளாதாரக் காரணங்களால் இவையும் நின்று போயின.

வரதரின் பிரசுர முயற்சிகளும் முக்கியமானவை. பண்டிதமணி கணபதிப்பிள்ளை, கைலாசபதி, மஹாகவி, முருகையன், பொன். முத்துக்குமாரன், செங்கை ஆழியான், காரை சுந்தரம்பிள்ளை, சோமகாந்தன், சாந்தன் முதலான பலரது நால்கள் 'வரதர் வெளியீடு' ஆக வெளிவந்தன.
'வரதரின் பல குறிப்பு' அவரது இன்னொரு முயற்சி. தமிழ் மக்களுக்குத் தேவையான பலவித விடயங்களைத் தொகுத்து ஆண்டுக்கு ஒன்றாக (1971 வரை) நான்கு பதிப்புக்கள் வெளியாகின.

வரதரின் இதழியற் பணியில் இன்னொரு மைல்கல் அறிவுக் களஞ்சியம். இலாப நோக்கின்றி குறைந்த விலையில் மாணவர்க்கான அறிவுத் தகவல்களைத் தாங்கி அறிவுக் களஞ்சியம் வெளியானது. செங்கை ஆழியான் இணையாசிரியராக இருந்தார். 1995 இலம் பெயர்வு வரை யாழ்ப்பாணத்தில் 3000 பிரதிகள் வரை விற்பனையாகி அமோக வரவேற்புப் பெற்றது அறிவுக் களஞ்சியம்.

வரதர் ஈழத்துச் சிறுகதையாசிரியர்களில் முக்கியமானவர். ஈழத்தின் முதலாவதும் முக்கியமானதுமான மறுமலர்ச்சிச் சங்கத்திற்கு கால்கோள் இட்டவர். இதழியலில் சிறந்து விளங்கியவர். முதற் கவிதை இதழ் வெளியிட்டவர். இவை தவிர ஈழத்தின் முக்கிய பதிப்பாளர்.
வரதரின் சேவைகளைப் பாராட்டி இலங்கைக் கலைக் கழகம் அவருக்கு 'சாஹித்திய இரத்தினம்' எனும் பட்டத்தை அளித்திருக்கிறது.

நன்றி: திசை புதிது இதழ்-1 (2003)

நம்மைப் பற்றிய கவிதை - ஆகர்ஷியா

ஆளாளுக்கு ஒப்பனையேற்றி
மேடையேறுகிறோம்.
இயங்கியல்
நம்மைத் தத்தமது வட்டத்துள்
வரையறுத்துள்ளது.
உன் ஒப்பனை கலையாது நானும்
என்னைக் குலைக்க மனமின்றி நீயும்
சம பருமன்களைச் சுமக்க வேண்டியிருக்கிறது.
வேடிக்கையதுவல்ல
ஒப்பனையற்றிருத்தல் கூட ஒருவித
பாத்திரமேற்பிற்கான
ஒத்திகையென்பதை
ஆளாளுக்கு மறந்து
விடாதிருக்கிறோம்.
இதனால்தான் போலும்
நம்முடைய வட்டங்கள்
ஒன்றையொன்று இடை
வெட்டிக் கொண்டதேயில்லை.
வெளியே பலரும் மெச்சுகிறார்களாம்
நம் இயங்கியலுக்குள்ளோடும்
ஒத்திசைவை....
எத்தனையோ வருடத் திரைநீக்கத்தில்
ஒருவித கலையலங்காரத்துடன்
சலிப்பேதுமின்றிய பாவனையில்...
ஆனாலும் என்னவோ
வட்டங்கள் மையொழுகக் கரைந்து
வெண்தாளில் பீச்ச்சியடிப்பதாய்
ஏக்கம் மிகுந்த கனவுகள் மட்டும்
இப்பவும் என் இரவுகளில்!

-30/ 06/ 2003